கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு.. மருந்து கடைக்கு சீல்


கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு.. மருந்து கடைக்கு சீல்


நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவர் பரிந்துரையின்றி  மருந்தகத்தில்   கருக்கலைப்பு மருந்து வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி  ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

திருச்செங்கோடு  அருகே  இராமாபுரம் கிராமத்தில் உள்ள கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி  ரம்யா (வயது 29) கர்ப்பமாக இருந்துள்ளார். திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  ரம்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்ப்பிணி  ஒருவர் உயிரிழந்த செய்தியை அறிந்து,   நாமக்கல் ஆட்சியர்  ஸ்ரேயா பி சிங்,  அவரது இறப்பின் உண்மைக் காரணத்தை கண்டறிய உத்தரவிட்டிருந்தார்.  இதற்காக குடும்ப நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர் வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.  

 

விசாரணையில்,  உயிரிழந்த கர்ப்பிணி  ரம்யா , மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் தனது வீட்டின் அருகில் உள்ள மருதம் என்னும் மருந்துக்கடையில் கருகலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது.  இதனையடுத்து ராமாபுரம் பகுதியில் உள்ள மருதம் மருந்தககத்திற்கு ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றனர். ஆனால் கடை பூட்டியிருந்ததாலும், நீண்ட நேரம் ஆகியும் உரிமையாளர் வராததால்  கடந்த 31.03.2022 தேதி மருந்தகத்திற்கு   சீல் வைக்கப்பட்டது.  அதனைத்தொடர்ந்து மருந்துக்கடை உரிமையாளர்  முத்துசாமியை  விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து  நாமக்கல்  ஆட்சியர் இதுகுறித்த அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், “ தேவையற்ற மற்றும் வேண்டத்தகாத கர்ப்பங்களை பாதுகாப்பான முறையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கருக்கலைப்பு சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

7 வாரங்களுக்கு உட்பட்ட கர்ப்பங்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்,  10 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்றும் ,   இதற்கு தங்கள் பகுதி கிராம சுகாதார செவிலியரை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  அதேபோல் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் , மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது எனவும் மருந்தககங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog